Monday, February 27, 2006

எட்டு நிமிடம்...


"தலைமுறை", "ஆப்பிள்" என்னும் பதிவின் தொடர்ச்சியாக என் சிந்தனைக்கு எட்டிய மற்றுமொரு செய்தி.

விரிந்திருக்கும் வானவெளியில், ஆச்சரியங்கள் நிறைந்திருக்கும் என்பதால், விண்ணைப் பார்த்து வியக்காத மன்வாசிகள் இல்லை எனலாம். அறியாத வரை செய்திகள் கூட ஆச்சரியம் தான். இதோ நான் முதலில் ஆச்சரியப்பட்டு பின்பு அறிந்துகொண்ட ஒரு செய்தி.

வானவெளியில் நாம் காணும் ஒவ்வொரு விண்மீனும் (star) நம்மிலிருந்து பல ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ஒரு ஒளியாண்டு என்பது தூரத்தின் அளவில் 5,865,696,000,000 மைல்கள் எனப்படும், காலத்தின் அளவில் ஒரு வருடம் எனப்படும். இதனால் விண்மீனில் இருந்து வெளியிடப்பட்ட ஒளி, நம்மை வந்தடைய (நம் கண்களுக்குப் புலப்பட) பல வருடங்கள் ஆகும். நாம் ஒரு விண்மீனைப் பார்க்கும் பொழுது, நம் கண்களுக்கு தென்படும் ஒளி, அந்த விண்மீனால், அக்கணத்தில் வெளியிடப்பட்டதல்ல. அந்த ஒளி, அந்த விண்மீனால் பல வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும்.

உதாரணத்திற்கு, நாம் காணும் ஒரு விண்மீன் நம்மிலிருந்து மூவாயிரம் ஒளியாண்டு தொலைவில் இருக்குமாயின், இன்று நாம் காணும் ஒளி அந்த விண்மீனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும். இன்று அந்த விண்மீன் அழிந்து போயிருக்கவும் வாய்ப்பிருக்கின்றது.
அதேபோல், வானவெளியில் விண்மீன்களுக்கிடையே நாம் காணும் வெற்றிடத்தில் விண்மீன்கள் இல்லை என்பதும் தவறு. அங்கு விண்மீன்கள் இருந்தும் நம் கண்களுக்கு புலப்படாததிற்கு காரணம், அந்த விண்மீன்களால் வெளியிடப்பட்ட ஒளி நம்மை இன்னும் வந்தடையவில்லை என்பதால்.

நமக்கு மிகவும் அருகில் (எட்டு ஒளிநிமிடம் மற்றும் இருபது ஒளிவிநாடி தொலைவில்) இருக்கின்ற விண்மீனுக்கு "சூரியன்" என்று நாம் பெயரிட்டுள்ளோம். இக்கணத்தில் நாம் காணும் ஒளி, சூரியனால் எட்டு நிமிடம் மற்றும் இருபது விநாடிக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும்.ஒருவேளை இக்கணமே சூரியன் இருண்டுவிட்டாலும், நீங்கள் இந்த பதிவைப் படித்து முடித்து பின்னூட்டம் எழுதும் வரை உங்களுக்கு ஆபத்து இல்லை என்றும் சொல்லலாம்.

பி.கு :
ஒரு ஒளியாண்டு என்பது, ஒரு வருடத்தில் ஒளி பயனம் செய்யும் தூரமாகும்.
ஒரு ஒளிநிமிடம் என்பது, ஒரு நிமிடத்தில் ஒளி பயனம் செய்யும் தூரமாகும்.

6 comments:

J S Gnanasekar said...

அருமையான பதிவு. இதே அறிவியல் உண்மையுடன் காதல் கலந்து எழுதிவிட்டு, பிறகு குப்பைத் தொட்டியில் வீசிய எனது பழைய கவிதை இது.

என் முகத்தையா
மறந்து போனாய்?
நான்காண்டுகள்
முந்தைய முக
ரகசியம் கேட்டறிய
நட்சத்திரமும் பக்கமில்லை?
நீயும் விலகுகிறாய்
நட்சத்திரம் போலவே!

-ஞானசேகர்

தமிழ் தாசன் said...

ஞானசேகர் அவர்களே,

பதிவுக்கு வந்தமைக்கு நண்றி.

//அருமையான பதிவு//....மிக்க நன்றி

//முந்தைய முக
ரகசியம் கேட்டறிய
நட்சத்திரமும் பக்கமில்லை?// இந்த வரிகள்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

J S Gnanasekar said...

தமிழ்தாசன் அவர்களே, உங்கள் பதிவில் ஒரு மிகப்பெரிய தவறு உள்ளது. அதாவது, சூரியன், பூமியில் இருந்து 8 ஒளிநிமிடத் தொலைவில் இல்லை; 8 ஒளிநிமிட மற்றும் 20 ஒளிவிநாடி தொலைவில் உள்ளது. அதாவது, சூரியன் என்னும் விண்மீன், பூமியில் இருந்து 500 ஒளிவிநாடி தொலைவில் உள்ளது ((8*60)+20=500). அதாவது, சூரியனில் இருந்து புறப்படும் ஒளிக்கதிர் பூமியை வந்தடைய 500 விநாடிகள் ஆகும். இதைக் கண்டுபிடிக்க மனிதன் பட்ட கஷ்டம், கொஞ்மில்லை.

பிரபஞ்சத்தில் 20 விநாடி என்பது மிகப்பெரிய தவறு. அதை சரிசெய்து விடுங்கள்.

உங்களிடம் இருந்து இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

-ஞானசேகர்

தமிழ் தாசன் said...

ஞானசேகர் அவர்களே,

பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி.

Anonymous said...

hey.......its really interesting fact

தமிழ் தாசன் said...

hi selva,

Thanks for visting the blog