Wednesday, February 02, 2011

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு - எதுக்கு இந்த பொழப்பு?கருணாநிதி:
பாமகவும் எங்களுக்கு 'சமிக்ஞை' கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் அவர்களுக்கு 'சமிக்ஞை' கொடுத்திருக்கிறோம். ஆனால் எப்போது பேசப் போகிறோம் என்பதற்கு தேதி இன்னும் நிர்ணயிக்கவில்லை.

ராமதாஸ்:
எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு 45 தொகுதிகள் வேண்டும்.

கருணாநிதி:
இப்போதைக்கு திமுக, காங்கிரஸ் தவிர, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சி பாரதம் ஆகியவையும் கூட்டணியில் உள்ளன.

ராமதாஸ்:
சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக வேறு கட்சிகளும் எங்களுடன் பேசி வருகின்றன. இதனால் இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் முடிவெடுக்கவில்லை.

அன்புமணி ராமதாஸ்:
பாமக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது

கருணாநிதி:
நாங்கள் இருப்பதாகச் சொன்னதை அவர் இல்லை என்று மறுத்த பிறகு, பாமகவுடன் கூட்டணி இல்லை.

ராமதாஸ்:
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. என்றாலும், தற்போது இது குறித்து சொல்லும் நிலையில் நான் இல்லை. வெகு விரைவில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். முதல்வரின் நம்பிக்கை வீண்போகாது.

ஜி.கே.மணி:
சேலம் மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்தவர், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு".

Tuesday, January 25, 2011

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே...போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் ரூ. 64 கோடி - சிபிஐ


காமன்வெல்த் போட்டிகளுக்கான திட்டப் பணிகளில் ரூ 6000 கோடி கோடி ரூபாய் மோசடி-மணி சங்கர அய்யர் # மக்களுக்கு போபர்ஸ் மறந்துவிட்டது


2 ஜி அலைக்கற்றை உரிமை கொடுத்ததில் ரூ 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு-சி.ஏ.ஜி. # மக்களுக்கு காமன்வெல்த் மறந்துவிட்டது


வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி!-பிரணாப் முகர்ஜி # இனி மக்களுக்கு spectrum மறந்துவிடும்.


அடுத்து என்னவோ?

Thursday, July 10, 2008

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்...


தட்ஸ் தமிழ் வலைதளத்தில் வந்த கட்டுரை தொகுப்பு...

அணு சக்தியில், இந்தியாவின் நிலைப்பாட்டை நன்றாக எடுத்துரைக்கும் வண்ணம் இருந்தது...

இதோ..


Monday, January 21, 2008

ஓர் அழகிய மழை நாளில்..ஓர் மழை நாளில்,
ஒளி மங்கிய நிலவொளியில்,
ஓர் குடையில் - பத்தில்
ஓர் காத தூர நடந்தோம்,
ஆழியின் அருகே.

அழகின் அர்த்தம் விளங்கிற்று,
அந்த அழகிய அந்தியில்.

ஆழியின் அமைதியை கலைத்து
களித்த, கனத்த காற்று,
பெண் அவளை கடந்த பொழுது,
பணிந்து பண் ஆனது.

அந்நிகழ்வை நோக்கியவன்
நெகிழ்ந்தேன் அக்கணமே.

குளிர் காற்றில் கலந்த,
மழைத் துளிகள் தீண்ட,
வெட்கத்தில் சிணுங்கினாள்.

முதலில் மெய்மறந்தேன்.
பின்பு, பணிந்தே போனேன்
பேதை காற்றாய்.

எனது நாட்குறிப்பேட்டில்,
"ஓர் மழை நாள்" மருவி
"ஓர் அழகிய மழை நாள்" என்றானது.

Monday, September 24, 2007

உன் நடை கண்டு...உன் நடை கண்டு, அகங்காரம் தூளானது காண்...
உன் படை கண்டு, திசையெல்லாம் பயந்தோடியது காண்...

Tuesday, September 18, 2007

என்னவளுக்காக ஒரு வெண்பா...

முதன் முதலாய் ஒரு
மரபுக் கவிதை இயற்றிட,
பாடுபொருள் நான் தேட,
என்னவள் முறைத்திட,
இதோ அவளுக்காக, நேரிசை வெண்பாவில்...


என்னவள்

பாரியின் தேர்கொண்ட மெல்லிடையாள் என்னவள்
தேரில் வரக்கண்டு கர்வமுற்றாள் - என்னவளோ
வெற்றிவிழா யாருக்குச் சொந்தமென கேட்டிட
போற்றினேன் முல்லையைப் பொய்த்து

Sunday, September 16, 2007

இது ஒரு காதல் கதை - பாகம் 3.இது ஒரு காதல் கதை - பாகம் 1.

இது ஒரு காதல் கதை - பாகம் 2.


காற்றில் மிதந்தவாறே, கீதாவைப் பார்த்தவன்,

"இந்த இரண்டு விரல்ல, ஒன்ன தொடு" என்று, தன் கைகளை நீட்ட,

"எதுக்குன்னு சொல்லு? அப்பதான் தொடுவேன்.."

"இப்பெல்லாம், நீ ரொம்பத்தான் கேள்வி கேக்குற" என்று அவன் சொல்லிமுடிப்பதற்குள்,

"சரி.. சரி.. இந்த விரல்... இப்பவாவது சொல்லு.."

"அப்புறமா சொல்றேன்"..

"டேய்... ஏமாத்தாத.. இப்ப ஒழுங்க சொல்லு.. இல்ல, அடிவாங்கபோற"...

"நல்ல இருக்கே கதை, "இப்ப சொல்லவா" இல்ல "அப்புறமா சொல்லவா"ன்னு, நான் கேட்டபோ, நீ தான் இந்த விரல்ல தொட்ட.."

விழிகள் ரசிக்க, இதழ்கள் மட்டுமே கோபத்துடன், "இப்பெல்லாம், நீ நல்லா பேச கத்துகிட்ட, "

வாகைச் சூடியவனாய், அவன் நகைக்க,

"சரி..அப்புறம்னா, எப்போ?"

"அப்புறம்னா.. நீ சொன்னத்துக்கு அப்புறம்"

"மறுபடியும் என்ன ஏமாத்த நினைச்ச.., நான் உன்கூட பேச மாட்டேன்..,"

புன்னகை குறையாமல்,"சரி சரி.. நீ சொல்லு.. என்ன விசேஷம்?"

முகமுழுதும் பூரிப்புடன், "அதுவா.. என் அக்காவிற்கு கல்யாணம் நிச்சயாமாயிடுச்சி.. அதான் சந்தோஷம்.."

"வாழ்த்துகள்... அடுத்தது உனக்கு தான்.. அதான் ரொம்ப சந்தோஷமா இருக்கியா?"

வெட்கத்துடன் "போடா... அதுக்கு இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு.."

"அக்காவிற்கு, லவ் மேராஜா? இல்ல.. "என்று அவன் கேள்வி முடியுமுன்,

"ஏன் அப்படி கேக்குற?.. லவ் எல்லாம் ஒன்னுமில்ல.. அப்பாவும் அம்மாவும், பார்த்த மாப்பிள்ளைதான்.."

"லவ் பன்ன தைரியம் இல்லன்னு சொல்லு.."

"இல்லப்பா, இதுல தைரியத்துக்கு இடமே இல்ல..பெத்தவங்க நம்ம மேல நம்பிக்கை வச்சிருக்காங்க..அந்த நம்பிக்கைக்கு,நம்ம குடுக்கிற மரியாதைன்னு வச்சுக்கோயேன்.."

காற்றில் பறந்தவன், மெதுவாக கீழிறங்கியவாறே,

"இதுல, நம்பிக்கை துரோகம் எங்கிருந்து வந்துச்சு.. நான் என்ன, வீட்டிற்கு தெரியாமலா கல்யாணம் பன்னிக்க சொல்றேன்?.. பெத்தவங்க சம்மதத்தோட தான் பன்னிக்க சொல்றேன்.."

"ம்ஹூம்.. நீ என்னதான் சொல்லு.. இதுல எனக்கு உடன்பாடே கிடையாது..வேலை கிடைக்கிற வரை, அவங்க தயவில இருந்துட்டு,அப்புறமா "நான் ஒருத்தர காதலிக்கிறேன்.., கல்யாணம் பன்னிவைங்க.. "ன்னு சொல்றது, உனக்கு வேனா தைரியமா தெரியலாம்.. ஆனா எனக்கு,அது சுயநலமா தான் தெரியுது.. "

கீழே விழுந்ததைக் காட்டிக்கொள்ளாமல்,"உனக்கு புரியவைக்கிறது கொஞ்சம் கஷ்டம்.. உன்ன புரிஞ்சுகிறது அதைவிட கஷ்டம்.. " என்று முனுமுனுக்க.

"என்ன.. வாய்க்குள்ளே பேசிக்கிற?.."

"உன்ன நினைச்சா.. ரொம்ப பெருமையா இருக்குமா... ரொம்ப பெருமையா இருக்கு"..என்றான் நடிகர் திலகம் போல்.

"நல்லாதான் ட்ரை பன்ற.. சரி.. இத விடு... நீ ஏதோ சொல்லனும்னு சொன்னல்ல,அதை சொல்லு.."

"அதுவா.. அது வந்து.. "என்று வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தவனை இடைமறித்தான் சுந்தர்.

"இங்க இருக்கீங்களா, நான் ஆடிட்டோரியத்தில் தேடினேன்" என்றவன்,

கீதாவிடம், "முன்னாடியே சொல்லிருந்தா, நாங்களும் வேஷ்டி சட்டைல வந்திருப்போம்ல?"

"அதுக்கு தான் சொல்லல.. " என்றாள் சிரித்துக்கொண்டே..

தெய்வம் போல வந்து காப்பாற்றியவனுக்கு மனதில் நன்றி சொல்லிவிட்டு, "எதுக்கு என்ன தேடின?.."

"Camera வொர்க் பன்னலடா, அதை சொல்லதான் வந்தேன்"..

"அது வொர்க் பன்னாதுன்னு தெரியும் டா"..

"தெரியுமா?, அப்புறம் ஏண்டா எடுத்துட்டு வந்த?.. அதுவும் farewell-க்கு வரனும்னு சொல்லுச்சா"..

"டேய்,நீ வேற.. ஏண்டா?.. அதுல பேட்டரி இல்லடா.. வாங்கனும்னு நினைச்சேன்.. வந்த அவசரத்துல மறந்துட்டேன்"..

"சரி.. பங்ஷன் ஆரம்பிக்கபோகுது.. ஆடிட்டோரியம் போங்க.. பைக் சாவி கொடுடா.. நான் வாங்கிட்டு வரேன்"

பைக் சாவியை கொடுத்திட்டு, வசந்த் கீதாவுடன் ஆடிட்டோரியம் நோக்கி நடந்தான்.

ஆடிட்டோரியம் வந்தவுடன்,
"கீதா.. நான் சொலல வந்ததை, இன்னொரு நாள் சொல்றேன்.."

"கண்டிப்பா சொல்லனும்.. சரியா?.." என்று அவனிடமிருந்து விடைபெற,

"சரி" என்பது போல் விழி இமைகளை பணித்தவன், நினைவுகளில் இருந்து மீண்டான்

இமைகள் திறந்த பொழுது, மழை மேகத்தின் முதல் துளி,
மண்ணை முத்தமிட்டு, மண் வாசனை வீசத்தொடங்கிற்று.
ஜன்னலின் வழியே, மழையை ரசிக்கலாணான்.


--- இன்று : கோவையில் ---
-மீண்டும் காதலிப்போம்