Monday, December 11, 2006

வெற்றிக்கொடி கட்டு...


வெற்றிக்கொடி கட்டு...
மலைகளை முட்டும் வரை முட்டு...
இலட்சியம் எட்டும் வரை எட்டு...

Saturday, December 02, 2006

இருவர் - உன்னோடு நான் இருந்த...


Orkut -இல் ஒரு நன்பர் இந்த வரிகளைத் தேடிக்கொண்டிருந்தார்.
அவருக்கு உதவி செய்ய type செய்தேன்...
நம்ம தமிழ்மண அன்பர்களுக்காக இதோ...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்

எண்ணூரு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!

பார்வையிலே சிலநிமிடம், பயத்தோடு சிலநிமிடம்!கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களில்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சிலநிமிடம்!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

எது நியாயம், எது பாவம்,
இருவர்க்கும் தோன்றவில்லை!

அது இரவா, அது பகலா,
அதைப்பற்றி அறியவில்லை!

யார் தொடங்க, யார் முடிக்க,
ஒருவழியும் தோன்றவில்லை!

இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை!

அச்சம் களைந்தேன் ஆசைகளை நீ அணைத்தாய்!
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்!

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்,
கடைசியிலே அழுத கண்ணீர்
கையில் இன்னும் முட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

Sunday, April 23, 2006

கேட்டதில் பிடித்தது(2)...

ஒரு பாடல் மக்கள் மனதில் இடம்பெற, பாடல்வரிகள் கவித்துவத்துடன் இருத்தல் மிக மிக அவசியம்.

"ஸ்டார்" படத்தில் இடம்பெற்ற "மனசுக்குள் ஒரு புயல்" பாடலின் இந்த வரிகள் மிகவும் பிடித்திருந்த்து.

மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முக்திப்பெற்று திரும்புதல் போல
உன் மடியில் சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்.
உன் பொன்மடி வாழ்க.


உங்களை கவர்ந்த சில வரிகளை இங்கு பகிர்ந்துகொள்ளுங்களேன்.....

Wednesday, March 08, 2006

வீராதி வீர... வீரமார்த்தாண்ட...


தமிழ் திரைப்படங்களில் வரும் வசனங்கள், பெரும்பாலும் (நகைச்சுவை காட்சிகளில் இடம் பெற்ற வசனங்களைத் தவிற) நாம் திரையரங்கை விட்டு வெளியெ வரும்பொழுது நினைவில் நிற்பதில்லை. ஆனால் நம்மை பாதித்த, நம்மை சிந்தனை செய்ய தூண்டிய சில வசனங்களை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிடுவதில்லை.

அப்படி என்னை பாதித்த,என்னை அதிகம் சிந்திக்க வைத்த பல வசனங்களுள் ஒன்று இதோ...

குருதிப்புனல் படத்தில் கமல் ஹாசன் "வீரம்" என்பதற்கு தரும் விளக்கம்.

"வீரம் என்றால் என்னவென்று தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது தான் வீரம்"

என்ன ஒரு அருமையான விளக்கம். வள்ளுவரும் இதை தான் "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" என்று தன் மொழியில் கூறியுள்ளார்.

Tuesday, March 07, 2006

அமென்-ரா ( கதையா? அல்ல நிஜமா? )


"அமென்-ரா" ( Amen-Ra ) என்னும் எகிப்து இளவரசி கி.மு1500 இல் வாழ்ந்தவள். அவள் மறைந்த பிறகு, அவளது உடலை மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சவப்பெட்டியில் வைத்து நைல் நதிக்கரையோரம் "லக்ஸர்" என்னும் நகரத்தில், பாதாளத்தில் மம்மியாக பதப்படுத்துவதற்காக புதைக்கப்பட்டது. பின்பு கி.பி1890 இல், லக்ஸர்க்கு வந்த நான்கு ஆங்கிலேய செல்வந்தர்கள், மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த அமென்-ராவால் கவரப்பட்டு, பல ஆயிரம் பவுண்டுகளைக் கொடுத்து அதை விலைக்கு வாங்கினர்.

அவர்களுள் ஒருவர், அமென்-ராவை தான் தங்கியிருந்த விடுதிக்கு எடுத்துச் சென்றார். பின்பு அங்கிருந்து பாலைவனம் நோக்கிச் சென்றவர் திரும்பவில்லை. எஞ்சிய மூவரில் ஒருவனை, எகிப்தியர் ஒருவர் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டார். மற்றொருவன் தன் வீட்டிற்கு சென்றதும் தனது சேமிப்புகள் கொள்ளைபோனதை அறிந்தான். கடைசி ஒருவனும், தீவிர நோயால் அவதியுற்று இறுதியில் தெருவிற்கே வந்துவிட்டான்.

இப்படியாக அந்த அமென்-ரா இங்கிலாந்தைப் பார்க்கும் முன்னே பல துன்பங்கள் தொடர்ந்தாலும் ஒருவழியாக இங்கிலாந்தைச் சென்றடைந்தாள். அங்கு அமென்-ராவை வாங்கிய வியாபாரி, தனது குடும்பத்தார் பலர் விபத்தில் காயமுற்றதால், அதை இங்கிலாந்து அருங்காட்சியகத்திற்கு கொடுத்துவிட்டார். அருங்காட்சியகத்திற்கு வந்த அமென்-ராவை வண்டியிலிருந்து இறக்கும் பொழுது, வண்டி தற்செயலாக பின்னால் சென்று ஒரு பாதசாரியை வதைத்தது. அமென்-ராவை அருங்காட்சியகத்திற்கு உள்ளே எடுத்துச் சென்ற இருவரில் ஒருவர்க்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொருவன் திடகார்த்திரமாக இருந்தபொழுதும் இரண்டு நாளில் இறந்துபோனார்.

அமென்-ராவை காட்சிப்பொருளாக வைத்தபோது பிரச்சனைகள் அதிகமானது. அமென்-ரா இருக்கும் சவப்பெட்டியில் உள்ள உருவத்தை தொட்டவரின் குழந்தை சில நாட்களில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தாள். இரவு நேரங்களில் அமென்-ரா இருந்த அறையிலிருந்து வினோதமான சத்தம் வரவே, அமென்-ராவை அருங்காட்சியகத்தின் கீழே ஒரு பொருள் கிடங்கில் வைக்க மேலாளர் உத்தரவிட்டார். உத்தரவிட்டவர் சில நாட்களில் மாண்டு போகவே, செய்தி பத்திரிகையை எட்டியது. ஒரு பத்திரிகைக்காக அமென்-ராவை படமெடுத்தவர், அதை பிரதியிட்டபொழுது அதில் கொடூரமான ஒரு முகம் தெரியவே பயத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

பிறகு, அமென்-ராவை தனியாருக்கு விற்றுவிடுதென அருங்காட்சியகம் முடிவு செய்து அதை ஒருவரிடம் விற்றது. அதை துணிந்து வாங்கியவர் பின்பு பல பிரச்சனைகளுக்கு ஆட்படவே அதை அருங்காட்சியகத்திடம் கொடுத்தபொழுது அவர்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி அமென்-ராவை ஒரு பரணில் அடைத்தார்.

இப்படியாக தனது பத்து வருட பயனத்தில் இருபதிற்கும் மேற்பட்ட உயிர்களின் அழிவுக்கு காரணமாக இருந்த அமென்-ராவைக் காணவந்த ஒரு அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர், அமென்-ராவால் நடந்ததாகச் சொல்லப்படும் அழிவுகள் அணைத்தும் கட்டுகதை என்றும், அவை அணைத்தும் தற்செயலாக நடந்தது என்று தான் நிரூபிக்கபோவாதாகவும் கூறி, அமென்-ராவை நியூயார்கிற்கு எடுத்துச் செல்ல முற்பட்டார்.

1912 வருடம் ஏப்ரல் மாதத்தில், நியூயார்கிற்கு தனது முதல் பயனத்தை மேற்கொள்ளும், ஒரு நட்சத்திர வெள்ளை நிற சொகுசு கப்பலில், அவர் அமென்-ராவை அழைத்துக்கொண்டு நியூயார்கிற்கு புறப்பட்டார். ஏப்ரல் 14 ஆம் தேதி நள்ளிரவில், யாரும் முன்னர் கேட்டிறாத வகையில் ஒரு பேரழிவில் இளவரசி அமென்-ரா தன்னுடன் பயனம் செய்த 1500 பயனிகளுடன் ஆழ்கடலின் அடியில் தஞ்சமடைந்தாள்.

அந்த சொகுசு கப்பலின் பெயர் "டைட்டானிக்".

Thursday, March 02, 2006

காதல் வலி...


காதலியே.... உன்னால்
எனக்கு எப்பொழுதும்
காதல்... வலியே...

காதலியாய் நீ
இருந்தபோதும்
காதல்... வலியே...
காரணம்,
மகிழ்ச்சியின்
முடிவிலி வலியே...

"இருந்த" என்பதால்
இல்லை இப்பொழுது
காதலியாய்.
இருக்கின்றாய்
காதல் வலியாய்...

மருத்துவத்தில், மெய்யில்
வலி வர
வழி இரண்டு.
தீவிர வலி
திடீரென்று வருவது.
தொடர் வலி
தொடர்ந்து வருவது.

மெய் வலியின்
மூலம் புரியவில்லை
எனக்கு.
வலி மட்டும்
மெய்யன புரிந்தது
உயிர்க்கு.
அது,
திடீரென்று
தீவிரமாய் வந்து
தினம் தொடரும் வலி
காதல் வலியே...

காதல் வலிக்கு
வலி நிவாரணம்
இல்லை.
இருந்தால் அது
காதல் வலியில்லை.

காதலியே.... உன்னால்
எனக்கு எப்பொழுதும்
காதல்... வலியே...

- தமிழ் தாசன்

Wednesday, March 01, 2006

குருடுங் குருடும்...


நாம் அனைவரும் நம்மிடம் உள்ள அறியாமையை அகற்றவேண்டுமெனில், அறியாமையை அகற்றும் திறன் படைத்த குருவிடம் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் பொழுது நாம் அறிந்த கொள்ள வேண்டியவற்றின் மீது நாம் கொண்டிருந்த கற்பனையை முற்றிலும் அகற்றி விட்டுச் செல்ல வேண்டும். இல்லையனில் நம்முடைய கற்பனையே, நமக்கும் குருவுக்கும் இடையே திரையாக இருந்து, நம் அறியாமையை அகற்றிக்கொள்ள தடையாக இருக்கும்.

சமீபத்தில், படித்ததில் பிடித்த இதனைப் போன்றதொரு வாழிவியல் நெறியை விளக்கத்துடன் உங்களுக்காக இதொ...

மெய்யான குருவை சென்றடைவது அதிமுக்கியம் என்றும், அப்படி சென்றடைய தவறினால் ஏற்படும் விழைவையும், திருமூலர் தன் திருமந்திரத்தில் அபக்குவன் ( பொய்யான குரு) என்னும் தலைப்பில் கூறியுள்ளார்.

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.


விளக்கம்:
அறியாமையினை நீக்கும் மெய்குருவினை கைக்கொள்ளாதவர், அறியாமை அகற்றும் நெறியே தெரியாத பொய்குருவினை மெய்யன கொள்வார் எனில், அங்கனம் வழிகாட்டத் தெரியாத குருடும், குருடும் கூடி குருட்டு ஆட்டம் கொண்டு குழியில் விழுவது போன்று பொய்குருவும், அவரை மெய்யன கொண்டோரும் அறியாமை என்னும் குழியில் விழ்வது உறுதி.

Monday, February 27, 2006

டூயட்...

தமிழ் திரைப்படங்களில், பாடல்களைத் தவிர பிற காட்சிகளில் வரும் கவிதைகள் அவ்வளவாக மனதில் நிற்பதில்லை. அவற்றுள் ஒன்று இதோ...

"டூயட்" திரைப்படத்தில், எனக்கு மிகவும் பிடித்த வைர வரிகள்...

சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால் எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும், தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும், மறக்காது நெஞ்சம்.
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.

எட்டு நிமிடம்...


"தலைமுறை", "ஆப்பிள்" என்னும் பதிவின் தொடர்ச்சியாக என் சிந்தனைக்கு எட்டிய மற்றுமொரு செய்தி.

விரிந்திருக்கும் வானவெளியில், ஆச்சரியங்கள் நிறைந்திருக்கும் என்பதால், விண்ணைப் பார்த்து வியக்காத மன்வாசிகள் இல்லை எனலாம். அறியாத வரை செய்திகள் கூட ஆச்சரியம் தான். இதோ நான் முதலில் ஆச்சரியப்பட்டு பின்பு அறிந்துகொண்ட ஒரு செய்தி.

வானவெளியில் நாம் காணும் ஒவ்வொரு விண்மீனும் (star) நம்மிலிருந்து பல ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ஒரு ஒளியாண்டு என்பது தூரத்தின் அளவில் 5,865,696,000,000 மைல்கள் எனப்படும், காலத்தின் அளவில் ஒரு வருடம் எனப்படும். இதனால் விண்மீனில் இருந்து வெளியிடப்பட்ட ஒளி, நம்மை வந்தடைய (நம் கண்களுக்குப் புலப்பட) பல வருடங்கள் ஆகும். நாம் ஒரு விண்மீனைப் பார்க்கும் பொழுது, நம் கண்களுக்கு தென்படும் ஒளி, அந்த விண்மீனால், அக்கணத்தில் வெளியிடப்பட்டதல்ல. அந்த ஒளி, அந்த விண்மீனால் பல வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும்.

உதாரணத்திற்கு, நாம் காணும் ஒரு விண்மீன் நம்மிலிருந்து மூவாயிரம் ஒளியாண்டு தொலைவில் இருக்குமாயின், இன்று நாம் காணும் ஒளி அந்த விண்மீனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும். இன்று அந்த விண்மீன் அழிந்து போயிருக்கவும் வாய்ப்பிருக்கின்றது.
அதேபோல், வானவெளியில் விண்மீன்களுக்கிடையே நாம் காணும் வெற்றிடத்தில் விண்மீன்கள் இல்லை என்பதும் தவறு. அங்கு விண்மீன்கள் இருந்தும் நம் கண்களுக்கு புலப்படாததிற்கு காரணம், அந்த விண்மீன்களால் வெளியிடப்பட்ட ஒளி நம்மை இன்னும் வந்தடையவில்லை என்பதால்.

நமக்கு மிகவும் அருகில் (எட்டு ஒளிநிமிடம் மற்றும் இருபது ஒளிவிநாடி தொலைவில்) இருக்கின்ற விண்மீனுக்கு "சூரியன்" என்று நாம் பெயரிட்டுள்ளோம். இக்கணத்தில் நாம் காணும் ஒளி, சூரியனால் எட்டு நிமிடம் மற்றும் இருபது விநாடிக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும்.ஒருவேளை இக்கணமே சூரியன் இருண்டுவிட்டாலும், நீங்கள் இந்த பதிவைப் படித்து முடித்து பின்னூட்டம் எழுதும் வரை உங்களுக்கு ஆபத்து இல்லை என்றும் சொல்லலாம்.

பி.கு :
ஒரு ஒளியாண்டு என்பது, ஒரு வருடத்தில் ஒளி பயனம் செய்யும் தூரமாகும்.
ஒரு ஒளிநிமிடம் என்பது, ஒரு நிமிடத்தில் ஒளி பயனம் செய்யும் தூரமாகும்.

Thursday, February 23, 2006

அங்கிகாரம்...

"தமிழ்தாசன்" என்னும் இந்த பதிவுமனையை பாராட்டிய "தேன்கூடு" வலைதளத்திற்கும், எனது பதிவுகளை வெளியிட்ட "தினமலர்" வலைதளத்திற்கும் என் நன்றிகள் பல.

இந்த உலகில் ஒவ்வொருவரும் தாம் செய்யும் செயல்களுக்கு,
அங்கிகாரம் கிடைக்கையில் மட்டற்ற மகிழ்சியடைகிறோம். அது
நமக்கு கிடைத்த பாராட்டு மட்டுமல்ல, வரும் நாட்களில்
நம்மை ஊக்குவிக்கும் உந்துசக்தியும் அதுவே. அங்கிகாரம் கிடைக்க நாம் செய்த உழைப்பை விட, அதை தக்க வைத்துகொள்ள நாம் கடினமாக உழைத்திட வேண்டும்.


அதை எளிதாக செய்திட தூண்டும் ஒரு நிகழ்வு..

ஒருமுறை சில மாணவர்கள் ஒரு மரத்தின் கிளையின் ஒரு பந்தை தொங்க விட்டு, அதை துப்பாக்கியால் சுட முயன்றனர். அவர்களால் பல முறை முயன்றும் சரியாக சுட முடியவில்லை. அப்போது அந்த வழியே வந்த சுவாமி விவேகானந்தர், "நான் ஒருமுறை சுடுகிறேன். துப்பாக்கியை என்னிடம் தாருங்கள்" என்றார். அதற்கு அவர்கள் "நீங்கள் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, உங்களால் சுட முடியாது" என்று ஏளனம் செய்து, துப்பாக்கியை அவரிடம் கொடுத்தனர். அதற்கு, "நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, ஆயினும் நான் சுட முயற்சி செய்கிறேன்" என்றவர் அந்த பந்தை நோக்கி குறிவைத்தார். அவர் சுட்டதும் அந்த பந்து சிதைந்துபோனது. அந்த மாணவர்கள், தாங்கள் செய்த தவறுக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்து, "நீங்கள் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, உங்களுக்கு இது எப்படி சாத்தியம்?" என்று கேட்டனர்.

அதற்கு அவர் தந்த விளக்கம் இதோ...

"நாம் எல்லோரும் ஒரு செயலை முதன் முதலாக செயல்படுத்தும்பொழுது, அதிக கவனத்துடனும், அதிக ஈடுபாடுடனும், அதிக அக்கறையுடனும், கருமமே கண்ணாகவும் செய்வதுண்டு. எனவெ நாம் அதில் வெற்றி பெறுவது எளிது. ஆகவே, எந்த ஒரு செயலை செயல்படுத்தும்பொழுதும் அதுவே முதல் தடவை என்று என்ணி செயல்படும்பொழுது வெற்றி என்பது எளிதாகிவிடும்."

இதையே,

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"

என்று, நான் வணங்கும் வள்ளுவர் தன் மொழியில் கூறியுள்ளார்.

Monday, February 20, 2006

கேட்டதில் பிடித்தது...


தமிழ் திரைப்படங்களில் வரும் பாடல்களை, தமிழ் தெரியாத பின்னனி பாடகர்கள் பாடும் பொழுது, பாடல் வரிகள் எல்லோரையும் சென்றடைவதில்லை.

இதோ அதற்கான ஒரு சான்று,

"அலைபாயுதே" என்னும் திரைப்படத்தில் வரும் "சிநேகிதனே" என்னும் பாடல். இந்த பாட்டின் ஆரம்பத்தில் வரும் அனுபல்லவி இதோ...

"நேற்று முன் இரவில் - உன்
நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவதுபோல்
உயிர் கலந்து களித்திருந்தேன்.

இன்று பின் இரவில்
அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பதுபோல்
மனம் கலங்கி புலம்புகிறேன்.

கூந்தல் நெளிவில்
எழில் கோலச் சரிவில்
கர்வம் அழிந்ததடி - என்
கர்வம் அழிந்ததடி.

சிநேகிதனே...சிநேகிதனே....."

கவிப்பேரரசு வைரமுத்து வின் "பெய்யன பெய்யும் மழை" என்னும் கவிதை தொகுப்பில் "மெய்பொருள்" என்னும் தலைப்பில் இந்த வைர வரிகள் உள்ளது.

இந்த வரிகளை மனதில் கொண்டு, பாடலை இனியொருமுறை கேளுங்கள். பாடலின் சுகம் புரியும்.

Friday, February 17, 2006

ஆப்பிள்...

"தலைமுறை" என்னும் பதிவின் தொடர்ச்சியாக என் சிந்தனைக்கு எட்டிய ஒரு செய்தி.

சர் ஐசக் நியூட்டன், ஒரு நாள் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது அவரது தலையில் ஒரு ஆப்பிள் விழுந்ததாகவும், அந்த நிகழ்வே அவருக்கு புவியீர்ப்புவிசையை கண்டறிய தூண்டுகோலாக இருந்தது என்றும் நம்மில் பலர் அறிந்த செய்தி. ஆனால் இது முற்றிலும் ( மிகைப்படுத்தப்பட்ட) தவறான செய்தி என்றும், நியூட்டன் ஒருபோதும் அப்படி கூறியதில்லை என்றும் "ஸ்டீபன் ஹாக்கிங்" என்னும் இயற்பியல் வல்லுனர் கூறுகிறார்.

( The story that Newton was inspired by an apple hitting his head
is almost certainly apocryphal. All Newton ever said was that the
idea of gravity came to him as he sat "in a contemplative mood"
and was "occasioned by the fall of an apple")


courtesy: "A Brief History Of Time" by Stephen Hawking.

அதாவது, நியூட்டன் தான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பொழுது புவியீர்ப்புவிசையை கண்டறிந்தார் என்றும், அச்சமயம் அவரது தலையில் ஆப்பிள் விழுந்தது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார்.

இதன் மூலம் நான் அறியப்படும் செய்தி, தலையில் ஆப்பிள் விழுந்ததால் புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்பட்டபோது ஆப்பிள் விழுந்தது என்பதாகும்.



தலைமுறை...

ஒவ்வொரு தலைமுறையின் தலையாய கடமைகளில் ஒன்று, தாம் கற்றுணர்ந்ததை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதாகும்.
அவ்வாறு எடுத்துரைக்க இயலாத ( தவறிய) ஒவ்வொரு
தலைமுறையும் "இணரூழ்த்தும் நாறா மலர்" க்கு இனையாவர்
என்பது வள்ளுவர் வாக்கு.


கடந்தகாலத்தை வருங்காத்திற்கு எடுத்துச் செல்பவர்கள், தான்
எடுத்துச் செல்லும் செய்திகளின் மெய்யறிந்து, மிகைப்படுத்தாமல் எடுத்துச் செல்லவேண்டும். செய்திகளை மிகைப்படுத்துதலுக்கு
ஆட்படுத்தும் போது, அதன் மெய்வடிவம் ம்ருவி, தவறான
செய்திகள்தான் வருங்காலத்தைச் சென்றடைகிறது.


என் சிந்தனைக்கு எட்டிய சில ( மிகைப்படுத்தப்பட்ட) செய்திகளை
வரும் பதிவுகளில் பதியவுள்ளேன்.


Friday, February 10, 2006

ஆழிப்பேரலை...



பஞ்ச பூதங்களே....

உங்களுக்குள் என்ன போட்டியா?
யார் மீது "பரணி" பாடவேண்டும் என்று.

மூங்கில் காடுகளில் தலைவிரித்தாடுகிறாள் ஒருத்தி.

"ரிக்டர்" அளவில் ஆடிக்காட்டுகிறாள் ஒருத்தி.

வாடைக் காற்றில் பாடைக் கட்டுகிறாள் ஒருத்தி.

"ஒசோன்" ஓட்டையால் உலக வெப்பம் உயர்த்துகிறாள் ஒருத்தி.

ஆழிப்பேரலையாகவும் ஊழிப்பெருவெள்ளமாகவும்
வந்து வென்றாள் தலைவி ஒருத்தி.

அவளுக்கு,

எனது பானியில்
"பரணி" பாடுகின்றேன்.

கடல் கொண்ட தமிழ்நாடு - இன்று
கடல் உண்ட தமிழ்நாடு.

பேரலையே...

நீ நீருக்கடியில் செய்த
அணு ஆயுத சோதனையா?
சோதணையின் வேதனையே
பல போதனைகள் தந்தாயிற்று..
வேண்டாம் மற்றொன்று..

"அமைதி" க்கு சான்றான கடலை
"சமாதி" க்கு உவமேயம் ஆக்கினாய்.

நல்லோர் எழுச்சி மகிழ்ச்சிதானே..
உன் எழுச்சி மட்டும் வீழ்ச்சியானதே.

உப்பிட்ட உன்னை
உள்ளவும் நினைத்தோம்.
நீயோ..
மனித அறுவடை செய்து,
மானுடம் சிந்திய கண்ணீரில்
உப்பு சமைக்கின்றாய்
வேண்டாம்
அந்தஉப்பு எங்களுக்கு.

காலி குடங்களை நிறப்பத்தான் கேட்டோம்.
இடுகாட்டில் பல நீர்குடங்களை ஏன் உடைத்தாய்.

வாடிய பயிரை காக்கத்தான் கேட்டோம்.
மனித வேரை ஏன் அறுத்தாய்.

பள்ளியின் நெருப்பை அனைக்கத்தான் கேட்டோம்.
பள்ளியில் பற்றியதைகொள்ளியி ஏன் ஏற்றினாய்.

கடல் அன்னை என்றோம்.
பூகம்பத்தின் பினாமி என்கிறாய்.

மணல் வீடு அழித்து விளையாடு என்றோம்.
காரை வீடும் வேண்டும் என்கிறாய்.

"விடாமுயற்சி" க்கு அலை என்றோம்.
"மூச்சை விடு" என்கிறாய்.

பூமியின், மூன்றில் இரண்டுபங்கு
இடஒதிக்கீடு என்றோம்.
போதாதென்று கடலை விட்டு
வெளிநடப்பு செய்கிறாய்.

ஆயிரம் கொன்றால் அரைவைத்தியம்
என்பதை தவறாய் உணர்ந்து,
முழுவைத்தியத்தையும் அரைநொடியில்
கற்றாயோ...

பழைய பாடம் அழித்து
புதிய படாம் புகற்றினாய்.

சாது மிரண்டாலும் காடு கொள்ளும் - கொள்ளாதே
கடல் மிரண்டால் நாடு.

கடல் கொண்ட தமிழ்நாடு - இன்று
கடல் உண்ட தமிழ்நாடு.

- தமிழ் தாசன்

காதலே...



உயிர் கொடுத்ததும் - பின்
உடல் கொடுத்ததும் காதல்

உன்னை கண்டதும் - பின்
என்னை கண்டதும் காதல்

தன்னலம் அழித்ததும் - பின்
தலைக்கணம் அழித்ததும் காதல்

நேசம் தந்ததும் - பின்
பாசம் தந்ததும் காதல்

நான் கொண்டதும் - பின்
என்னை கொண்டதும் காதல்

நீ வந்ததும் - பின்
கவி வந்ததும் காதல்

முடிவாக...

நான் தொலைத்ததும் - பின்
என்னை தொலைத்ததும் காதலே...

-தமிழ் தாசன்.

Tuesday, February 07, 2006

அகர முதல...


எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்


எண்ணத்தின் வலிமைக்கு ஏற்ப, நாம் எண்ணிய செயல்கள் நடந்தேறும்.

எனும் வள்ளுவன் வாக்கில்,

தமிழ்தாசன் என்னும் இந்த பதிவுமனை இன்று இனிதே பதிவு செய்யப்படுகின்றது.