Thursday, February 23, 2006

அங்கிகாரம்...

"தமிழ்தாசன்" என்னும் இந்த பதிவுமனையை பாராட்டிய "தேன்கூடு" வலைதளத்திற்கும், எனது பதிவுகளை வெளியிட்ட "தினமலர்" வலைதளத்திற்கும் என் நன்றிகள் பல.

இந்த உலகில் ஒவ்வொருவரும் தாம் செய்யும் செயல்களுக்கு,
அங்கிகாரம் கிடைக்கையில் மட்டற்ற மகிழ்சியடைகிறோம். அது
நமக்கு கிடைத்த பாராட்டு மட்டுமல்ல, வரும் நாட்களில்
நம்மை ஊக்குவிக்கும் உந்துசக்தியும் அதுவே. அங்கிகாரம் கிடைக்க நாம் செய்த உழைப்பை விட, அதை தக்க வைத்துகொள்ள நாம் கடினமாக உழைத்திட வேண்டும்.


அதை எளிதாக செய்திட தூண்டும் ஒரு நிகழ்வு..

ஒருமுறை சில மாணவர்கள் ஒரு மரத்தின் கிளையின் ஒரு பந்தை தொங்க விட்டு, அதை துப்பாக்கியால் சுட முயன்றனர். அவர்களால் பல முறை முயன்றும் சரியாக சுட முடியவில்லை. அப்போது அந்த வழியே வந்த சுவாமி விவேகானந்தர், "நான் ஒருமுறை சுடுகிறேன். துப்பாக்கியை என்னிடம் தாருங்கள்" என்றார். அதற்கு அவர்கள் "நீங்கள் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, உங்களால் சுட முடியாது" என்று ஏளனம் செய்து, துப்பாக்கியை அவரிடம் கொடுத்தனர். அதற்கு, "நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, ஆயினும் நான் சுட முயற்சி செய்கிறேன்" என்றவர் அந்த பந்தை நோக்கி குறிவைத்தார். அவர் சுட்டதும் அந்த பந்து சிதைந்துபோனது. அந்த மாணவர்கள், தாங்கள் செய்த தவறுக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்து, "நீங்கள் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை, உங்களுக்கு இது எப்படி சாத்தியம்?" என்று கேட்டனர்.

அதற்கு அவர் தந்த விளக்கம் இதோ...

"நாம் எல்லோரும் ஒரு செயலை முதன் முதலாக செயல்படுத்தும்பொழுது, அதிக கவனத்துடனும், அதிக ஈடுபாடுடனும், அதிக அக்கறையுடனும், கருமமே கண்ணாகவும் செய்வதுண்டு. எனவெ நாம் அதில் வெற்றி பெறுவது எளிது. ஆகவே, எந்த ஒரு செயலை செயல்படுத்தும்பொழுதும் அதுவே முதல் தடவை என்று என்ணி செயல்படும்பொழுது வெற்றி என்பது எளிதாகிவிடும்."

இதையே,

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"

என்று, நான் வணங்கும் வள்ளுவர் தன் மொழியில் கூறியுள்ளார்.

2 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

வாங்க நெல்லைக்காரரே..

பதிவுமனையில் பல பதிவுகள் மனதில் பதியும் வண்ணம் தந்து கலக்குங்க..

தமிழ் தாசன் said...

நிலவு நண்பரே..

பதிவுமனைக்கு வந்தமைக்கு நன்றி..

//மனதில் பதியும் வண்ணம் தந்து கலக்குங்க.. //

உங்கள் ஆசியுடன் கலக்குவோம்..